கறம்பக்குடி அருகே சாலை போடும் பணி தாமதம் பக்தர்கள், பொதுமக்கள் அவதி

கறம்பக்குடி அருகே சாலை போடும் பணி தாமதமாவதால் பக்தர்கள், பொதுமக்கள் அவதிப்பட்டு வரு கின்றனர்.

Update: 2019-02-20 22:45 GMT
கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரியில் பிரசித்தி பெற்ற சுகந்த பரிமளேஸ்வரர் சமேத பெரிநாயகி அம்மன் கோவில் உள்ளது. தோஷ நிவர்த்தி ஸ்தலமான இக்கோவிலுக்கு வந்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். உடல்பிணி அகலும் என்பது ஐதீகம். இதனால் இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட பகுதிகளிலிருந்து பாதயாத்திரையாகவும் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருவது வழக்கம்.

மேலும் திருமணஞ்சேரியை சுற்றி 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கறம்பக்குடியிலிருந்து திருமணஞ்சேரி, கன்னியான்கொல்லை வழியாக வாணக்கன்காடு வரை செல்லும் சாலை மிகவும் மோசமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் சார்பில், புதிய சாலை போட கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.

இதையடுத்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 93 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை போடும் பணி தொடங்கப்பட்டது. கறம்பக்குடி திருமணஞ்சேரி விலக்கு சாலையிலிருந்து வாணக்கன்காடு வரை கப்பி கற்கள் பரப்பப்பட்டு கிராவல் மண் போடப்பட்டது. அதன் பின் எந்த பணியும் நடை பெறாமல் சாலைபோடும் பணி கிடப்பில் போடப் பட்டுள்ளது.

தற்போது கப்பி கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. கிராவல் மண் புழுதியாகி தூசி பறப்பதால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். திருமணஞ்சேரி கோவில் வழியாக இயக்கப் படும் அரசு பஸ், மின்பஸ் போன்றவை சரியாக இயக்கப்படுவதில்லை. இதனால் சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள விவசாயிகள், பெண்கள், மாணவ-மாணவிகள், அரசு அலுவலர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சாலை போடும் பணி கடந்த ஒரு ஆண்டாக கிடப்பில் போடப்பட்டிருப்பது பொதுமக்களையும், பக்தர்களையும் கொதிப்படைய செய்துள்ளது. போராட்டம் தான் தீர்வு என்ற நிலைக்கு கொண்டு செல்லாமல் திருமணஞ்சேரி கோவில் சாலை போடும் பணியை தாமதமின்றி விரைவாக முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமணஞ்சேரி கோவில் சாலைக்காக அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில், ஆர்ப்பாட்டம், சாலை மறியல், உண்ணாவிரதம், நாற்றுநடும் போராட்டம், உணவு சமைக்கும் போராட்டம், சங்கு ஊதும் போராட்டம், பிணம் புதைக்கும் போராட்டம் என 15 வகையிலான போராட்டங்களை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்