விளம்பர பேனர்கள் வைப்பது குறித்து அரசியல் கட்சியினருடன் அதிகாரிகள் ஆலோசனை

விளம்பர பேனர்கள் வைப்பது குறித்து அனைத்து அரசியல் கட்சியினருடன், அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

Update: 2019-02-21 22:45 GMT
கூடலூர்,

அனுமதி இன்றி விளம்பர பேனர்கள் வைப்பதால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இதையொட்டி அனுமதி இன்றி விளம்பர பேனர்கள் வைக்கும் செயல்கள் நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது. இதனால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதியில் விளம்பர பேனர்கள் வைப்பது குறித்து அனைத்து அரசியல் கட்சியினருடன் கலந்தாலோசனை நடத்தப்பட்டது.

கூடலூர் தாலுகாவில் ஓவேலி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் எம்.என்.வேணுகோபால் தலைமையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜாமணி மற்றும் அனைத்து அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் காண்பித்தனர். தொடர்ந்து பேரூராட்சி பகுதியில் எந்தவிதமான பதாகைகளும், விளம்பர பேனர்களும் வைக்க மாட்டோம் என அரசியல் கட்சியினர் உறுதி அளித்தனர். பின்னர் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஹரிதாஸ் நன்றி கூறினார்.

இதேபோல் தேவர்சோலை பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் குணாளன் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஸ்வேதா, நூர்ஜஹான் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர், வியாபாரிகள் இடையே கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேரூராட்சி பகுதியில் அனுமதி இன்றி விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது. 15 தினங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டரிடம் முறையாக அனுமதி பெற்று பேனர்கள் வைத்து கொள்ளலாம் என செயல் அலுவலர் குணாளன் அரசியல் கட்சியினருக்கு தெரிவித்தார். இதை அனைவரும் ஏற்று கொண்டனர்.

நடுவட்டம் பேரூராட்சி பகுதியில் விளம்பர பேனர்கள் வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் இப்ராகீம் தலைமையில் நடைபெற்றது.

இதில் அனைத்து அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். அப்போது முன் அனுமதி இன்றி விளம்பர பேனர்கள் வைப்பது இல்லை என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் (பொறுப்பு) நாராயணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகராட்சி மேலாளர் நாகராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அரசியல் கட்சியினருக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

நகராட்சி பகுதியில் விளம்பர பலகைகள் மற்றும் பேனர்கள் அனுமதி இன்றி வைக்கக்கூடாது. அவ்வாறு மீறி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உரிய அனுமதி பெற்று பேனர்களை வைக்கலாம். மேலும் முன்பணம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர். அப்போது கூடலூர் நகராட்சி பகுதியில் விளம்பர பேனர்கள் வைத்தாலும் 2 தினங்களில் அகற்றப்படுகிறது. எனவே யாரும் விதிமுறைகளை மீறுவது இல்லை என அனைத்து அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.

குன்னூர் நகராட்சியில் கூட்ட அரங்கில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) பாலமுருகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சியினருக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கை குறித்தும், விளம்பர பேனர்களின் உயரம் மற்றும் அகலம் குறித்து விளக்கி கூறினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சியினர் தலைவர்கள் வருவது குறித்து 2 நாட்களுக்கு முன்புதான் தெரியும், நாங்கள் குன்னூரில் இருந்து ஊட்டி சென்று அனுமதி பெற காலதாமதமாகும். எனவே நகராட்சி கமிஷனரிடம் மனு கொடுக்கும் போது விளம்பர பேனர் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினர். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் விரிவான அறிக்கை கொடுக்கபடும் என்று கமிஷனர் (பொறுப்பு) பாலமுருகன் கூறினார். இதில் நகரமைப்பு அலுவலர் மதியழகன், மேலாளர் பரந்தாமன் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்