விபத்தில் சிக்கிய வேனில் இருந்து ரூ.2½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் பெங்களூருவில் இருந்து கடத்தி வந்தது அம்பலம்

காரிமங்கலம் அருகே விபத்தில் சிக்கிய வேனில் பெங்களூருவில் இருந்து கடத்தி வந்த ரூ.2½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2019-02-21 22:15 GMT

காரிமங்கலம்,

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் பகுதியை சேர்ந்தவர் துரைசிங் (வயது 30). இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று பெங்களூருவில் இருந்து ஒரு வேனில் சேலம் நோக்கி வந்தார். வேனை துரைசிங் ஓட்டி வந்தார். இந்த வேன் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டி பிரிவு ரோட்டில் வந்த போது திடீரென சாலையோரம் இருந்த பெயர் பலகையில் மோதியது.

இந்த விபத்தில் வேனின் முன்பகுதி நொறுங்கியது. இதில் துரைசிங் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் காரிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த துரை சிங்கை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் போலீசார் விபத்தில் சிக்கிய வேனில் சோதனை நடத்தினர். அப்போது அதில் 5 பெரிய பண்டல்கள் இருந்தது. அதனை பிரித்து பார்த்த போது அரசால் தடை செய்யப்பட்ட 225 கிலோ எடை உள்ள புகையிலை பொருட்கள் இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்து 250 ஆகும்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், வேனுடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து காரிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது துரைசிங் தனது கடையில் வைத்து விற்பனை செய்வதற்காக பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்