சட்ட விரோதமாக ஆற்றுமணல் அள்ளுவதாக வழக்கு: கடலாடி அருகில் சவடு மண் குவாரிக்கு தடை

கடலாடி அருகே உள்ள சவடு மண் குவாரி செயல்பட தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கடுகுசந்தையைச் சேர்ந்த கருப்பையா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

Update: 2019-02-21 22:45 GMT
மதுரை, 

கடலாடி பகுதியில் உள்ள கடுகுசந்தை கிராம மக்களில் பெரும்பாலானோர் மிளகாய் விவசாயம் செய்து வருகின்றனர். கடுகுசந்தை கண்மாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் மூலம் தான் விவசாயம் நடக்கிறது. தற்போது போதுமான மழை இல்லாததால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சவடு மண் அள்ள அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் சட்ட விரோதமாக ஆற்று மணலை அள்ளி வருகின்றனர். 4 நாட்களில் மட்டும் 800 லாரிகளில் ஆற்று மணலை அள்ளி கடத்தியுள்ளனர். இதனால் எங்கள் பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நிலத்தடிநீர் படுபாதாளத்துக்கு சென்றுவிட்டது.

தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயத்தை நம்பி உள்ள எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. மணல் கொள்ளைக்கு அதிகாரிகளும், போலீசாரும் துணையாக உள்ளனர். எனவே எங்கள் பகுதியில் சவடு மண் அள்ள அனுமதி பெற்றுவிட்டு, ஆற்று மணலை சட்டவிரோதமாக அள்ளும் குவாரிக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் ஆர்.காந்தி, சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளப்படுவதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கடுகுசந்தை பகுதியில் உள்ள குவாரி செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கு குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் பதில் அளிக்கவும் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்