வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் பட்டியலில் சேர்க்கக்கோரி தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் 2-வது நாளாக குவிந்த பொதுமக்கள்

வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் பட்டியலில் சேர்க்கக்கோரி தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பங்களை அளிப்பதற்காக நேற்று 2-வது நாளாக பொதுமக்கள் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-21 22:45 GMT
தஞ்சாவூர்,

தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு நிதி உதவியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார். விவசாய தொழிலாளர்கள், நகர்புற ஏழைகள், பட்டாசு தொழிலாளர்கள், மீன்பிடி, சிறைத்தறி, கைத்தறி, கட்டுமான, சலவை, உப்பள, மரம் ஏறும் தொழிலாளர்கள் என 60 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் உள்ள பெயர்கள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண் காணிப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதனால் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் இடம் பெறாத ஏழைகள் தங்களுக்கும் சிறப்பு நிதி உதவி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் தங்களை வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியலில் சேர்க்கக்கோரி விண்ணப்பங்களும் அளித்து வருகிறார்கள்.

நேற்று முன்தினம் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று 2-வது நாளாகவும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள 51 வார்டுகளில் இருந்தும் மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் விண்ணப்பங்களை அளிப்பதற்காக வந்தவர்கள் இருசக்கர வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்தினர். இதனால் ராசாமிராசுதார் மருத்துவமனை வளாகத்தில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “தற்போது அரசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் வசதி படைத்தவர்களாக உள்ளனர். ஆனால் ஏராளமான ஏழைகள், பட்டியலில் சேர்க்கப்படாமல் உள்ளனர். எனவே இது தொடர்பாக முறையாக ஆய்வு செய்து வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் பட்டியலில் சேர்த்து அரசு சிறப்பு நிதிஉதவியை வழங்க வேண்டும்”என்றனர்.

மேலும் செய்திகள்