பெண் டாக்டர் மீதான வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

பெண் டாக்டர் மீதான வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-02-21 19:58 GMT
சென்னை,

சென்னை செட்டியார் அகரத்தை சேர்ந்தவர் வேதகிரி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘எனது வீட்டிற்கு முன்பு கடைகள் கட்டியுள்ளேன். அதில், வானரகத்தை சேர்ந்த டாக்டர் கங்கா நிவேதிகா ஆஸ்பத்திரியும், அவரது கணவர் மோகன்பாபு மருந்து கடையும் நடத்துகின்றனர். இவர்களுடன் எனக்கு பிரச்சினை ஏற்பட்டதால், கடையை காலி செய்யும்படி கூறினேன்.

இந்த நிலையில், மருந்து கடைக்கு 2021-ம் ஆண்டு வரை உரிமம் பெற்றுள்ளனர். உரிமம் பெறுவதற்காக, கட்டிட உரிமையாளரான என்னுடைய கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர். அதற்கு பிரேமா, ராதா ஆகியோர் சாட்சி கையெழுத்து போட்டுள்ளனர். இந்த மோசடி குறித்து நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.சிலம்புச்செல்வன் ஆஜரானார். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த டிசம்பர் 20-ந் தேதி வழக்கை பதிவு செய்து, புலன்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்’ என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ‘முடிந்த அளவு விரைவாக புலன்விசாரணையை முடித்து, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்