தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற, கரூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

Update: 2019-02-21 22:15 GMT
கரூர்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஊக்க உதவித் தொகை திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற தகுதிடைய விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம். அதன்படி கரூர் மாவட்டத்தில் 2018-2019 ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தமிழகத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி, பல்கலைக் கழகத்தில் பயிலும் தலைச்சிறந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ஊக்க உதவித் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் (ஷ்ஷ்ஷ்.பீணீ௴.௴ஸீ.ரீஷீஸ்.வீஸீ) மூலம் சமர்ப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரூ.10,000-ம், கல்லூரி, பல்கலைக்கழக மாணவர் களுக்கு ரூ.13,000-ம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதல் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 30-ந்தேதி வரையுள்ள காலக் கட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். குழுப் போட்டிகளாயின் முதல் இரண்டு இடங்களையும், தனிநபர் போட்டிகளாயின் முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். தேசிய அளவிலான போட்டிகள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டுக்கள் கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு ஆணையம், மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் அகில இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் அகியவற்றினால் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

கடந்த 13-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த ஏழு வேலை நாட்களுக்குள் தங்களது அசல் சான்றிதழை சம்பந்தப்பட்ட மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரியிடம் சரிபார்த்தலுக்காக காண்பிக்க வேண்டும். ஒரு வேளை கடைசி நாளன்று விண்ணப்பதாரர் விண்ணப்பித்தால் அதிலிருந்து ஏழு வேலை நாட்களுக்குள் அசல் சான்றிழை காண்பிக்க வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஊக்க உதவித் தொகை விண்ணப்பங்களை வருகிற மார்ச் மாதம் 12-ந்தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். எனவே கரூர் மாவட்டத்திலுள்ள தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்