இரட்டை கொலை வழக்கில் கைதான ஆட்டோ டிரைவர் சிறையில் அடைப்பு

திருச்சி கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் கோடிலிங்கம், இன்ஸ்பெக்டர் சண்முகவேல் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் ஜெகநாதனை கைது செய்தனர்.

Update: 2019-02-21 22:45 GMT
மலைக்கோட்டை,

திருச்சி மலைக்கோட்டை ஆண்டாள் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன்(வயது37). ஆட்டோ டிரைவர். கடந்த 19-ந் தேதி இரவு, திருச்சி கீழதேவதானம் பகுதியை சேர்ந்த பெயிண்டர் பிரகாஷ்(38), அவரது நண்பர் ராஜ்குமார்(30) ஆகியோர் அங்குள்ள பெட்டிக்கடை அருகே மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சென்ற ஆட்டோ டிரைவர் ஜெகநாதன் அதை செல்போனில் பதிவு செய்ததாக கூறப்பட்டது. இதைப்பார்த்த 2 பேரும், ஜெகநாதனை சரமாரியாக அடித்து உதைத்து அவரது செல்போனையும் பறித்தனர். பின்னர் செல்போனை ஆய்வு செய்து விட்டு ஒப்படைத்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த ஜெகநாதன் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து பிரகாஷ், ராஜ்குமார் ஆகியோரை சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

இதுகுறித்து திருச்சி கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் கோடிலிங்கம், இன்ஸ்பெக்டர் சண்முகவேல் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் ஜெகநாதனை கைது செய்தனர். அவரிடம் முழுமையாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்ற பின்னர், கோட்டை போலீசார் நேற்று மாலை திருச்சி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி கார்த்திகேயன், ஜெகநாதனை வருகிற மார்ச் 7-ந் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

மேலும் செய்திகள்