கர்நாடகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் 1,000 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் முதல்-மந்திரி குமாரசாமி அறிவிப்பு

கர்நாடகத்தில் அடுத்த கல்வி ஆண்டில் 1,000 பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார்.

Update: 2019-02-21 22:35 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்படும் என்று ஏற்கனவே முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்தார்.

ஆங்கில வழி வகுப்பு

இதற்கு முன்னாள் முதல்-மந்திரி சித்த ராமையா உள்பட சில காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் தனது முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று குமாரசாமி அறிவித்தார்.

இந்த நிலையில் அடுத்த கல்வி ஆண்டில் (2019-20) 1,000 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்- மந்திரி குமாரசாமி நேற்று அறிவித்தார்.

குமாரசாமி அறிவிப்பு

அதாவது கர்நாடக உயர்கல்வித்துறையில் மறு ஆராய்ச்சியின் அவசியம் மற்றும் அதற்கான வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு பெங்களூரு மகாராணி கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கிவைத்து இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

மேலும் அவர் பேசிய தாவது:-

தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை விட அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று மாநில அரசு கருதுகிறது. தனியார் பள்ளிகளை போலவே, அரசு பள்ளிகளையும் கோடை விடுமுறை முடிந்து மே மாதத்தில் இருந்தே திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒத்துழைக்க வேண்டும்

ஆசிரியர்கள் விடுமுறை வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும். ஆசிரியர்களின் பிரச்சினைகள் என்ன என்பதை கூறினால், அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏழை குடும்பங்களின் குழந்தைகள் தரமான கல்வியை பெற முடியாத நிலை உள்ளது. ஏழை குழந்தைகளுக்கு அரசு சார்பில் உயர்கல்வி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மாநில அரசுக்கு பல்வேறு சவால்கள் உள்ளன.

ரூ.16 கோடி நிதி

நான் முன்பு முதல்-மந்திரியாக இருந்தபோது இந்த கல்லூரியின் மேம்பாட்டிற்கு ரூ.16 கோடி நிதி ஒதுக்கினேன். மாணவர்கள் தங்களுக்கு உள்ள பிரச்சினைகளை எனக்கு தெரிவித்தால், அதை சரிசெய்ய முயற்சி செய்வேன்.

இந்த கல்லூரி மாணவர்கள் சாலையை கடந்து கல்லூரிக்கு வர சிரமங்களை சந்தித்தனர். உங்களுக்காக நடை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதில் தானியங்கி மின்தூக்கியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

1,000 பள்ளிகளில் ஆங்கில வழி...

தரமான கல்வியை வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும். கர்நாடகத்தில் 1,000 பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு நடத்தப்படுகிறது. இந்த வகுப்புகள் அடுத்த கல்வி ஆண்டு முதல் தொடங்கப்படும்.

இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி பேசினார்.

மேலும் செய்திகள்