தாரமங்கலம் அருகே புதிய வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாணவி பலி

தாரமங்கலம் அருகே புதிய வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-02-22 21:45 GMT
தாரமங்கலம், 

சேலம் எருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 37). இவருக்கு கவிதா (13) மற்றும் காவியா, கவுசல்யா ஆகிய 3 மகள்கள் இருந்தனர். சேட்டு தாரமங்கலம் அருகே உள்ள சேடப்பட்டியில் நிலம் வாங்கி புதிதாக வீடு கட்டி வருகிறார். கவிதா சேடப்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

வீட்டுக்கு செங்கற்களுக்கு பதிலாக சிமெண்டு கற்களை வைத்து சுவர் எழுப்பப்பட்டு வந்தது. தினமும் சுவர் நன்றாக பிடிமானம் இருக்க தண்ணீர் ஊற்றப்பட்டது. நேற்று முன்தினம் மாலை வீட்டின் சுவருக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக புதியதாக கட்டப்பட்ட சுவரின் மீது கவிதா ஏறினார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் சுவரில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனால் சுவர் இடிந்ததுடன், சிமெண்டு கற்களும் அவர் மீது விழுந்தன. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதிய வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்