புதுக்கோட்டை புதிய பஸ் நிலைய இலவச கழிவறையை சுத்தம் செய்யாததை கண்டித்து நூதன போராட்டம்

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் உள்ள இலவச கழிவறையை சுத்தம் செய்யாததை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர்.

Update: 2019-02-22 22:15 GMT
புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது புதிய பஸ் நிலையம். இங்கிருந்து சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் உள்பட பல்வேறு நகரங்களுக்கு தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பயணிகள் வசதிக்காக திருச்சி மற்றும் தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பஸ்கள் நிற்கும் பகுதியில் இலவச கழிவறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதேபோல பஸ் நிலைய வளாகத்தில் 2 இடங்களில் கட்டண கழிவறைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. பஸ் நிலையத்தில் உள்ள இலவச கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படாததால், பயணிகள் பெரும்பாலானவர்கள் கழிவறையை பயன்படுத்தாமல் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர். இதனால் பஸ் நிலைய வளாகத்தில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இலவச கழிவறைகளை முறையாக சுத்தம் செய்யாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, கழிவறைகளை சுத்தம் செய்ய, பொதுமக்களிடம் பிச்சை எடுத்து நகராட்சிக்கு பணம் செலுத்தும் நூதன போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது தலைமை தாங்கினார். துணை செயலாளர் கலையரசன், இளைஞரணி அமைப்பாளர் பாபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள், திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பயணிகள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகள் கழிக்கும் இடத்தில் உங்கள் அசிங்கத்தை நீங்களே பாருங்கள் என்ற வாசகத்துடன் கூடிய கண்ணாடியை வைத்து நின்று கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை புதிய பஸ் நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி பஸ் நிலையம் பகுதியில் புதுக்கோட்டை டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நடைபெறுவதற்கு முன்பாக நகராட்சி பணியாளர்கள் புதுக்கோட்டை புதிய பஸ் நிலைய பகுதியில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்