தென் பெண்ணையாற்றில் இருந்து காரில் மணல் கடத்திய வாலிபர் கைது

பாகூர் அருகே தென் பெண்ணை ஆற்றில் இருந்து காரில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-02-22 23:08 GMT

பாகூர்,

பாகூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் வீரப்பன் மற்றும் கண்ணப்பன் ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் ஆராய்ச்சிக்குப்பம்–கங்கனாங்குப்பம் இடையே சென்றபோது அந்த வழியாக ஒரு கார் வேகமாக வந்தது.

அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை நிறுத்துமாறு சைகை செய்தனர். ஆனால் கார் டிரைவர் காரை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டிச் சென்றார். அதனால் மேலும் சந்தேகமடைந்த போலீசார் தங்களின் மோட்டார் சைக்கிளில் அந்த காரை விரட்டிச் சென்றனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து போலீஸ்காரர் வீரப்பன் தவறி விழுந்தார். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. எனினும் போலீசார் தொடர்ந்து அந்த காரை விரட்டி சென்று சிறிது தூரத்தில் மடக்கினர்.

பின்னர் போலீசார் அந்த காரை சோதனை செய்தனர். அப்போது கார் டிக்கியில் மணல் மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் பாகூர் புதுகாமராஜ் நகரைச் சேர்ந்த சுரேஷ் (வயது 33) என்பதும், இவர் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணலை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து போலீசார் சுரேசை கைது செய்தனர். அவர் கடத்தி வந்த 21 மணல் மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்