பரமக்குடி அருகே கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட பக்தர்களுக்கு வாந்தி–மயக்கம் கலெக்டர் விசாரணை

பரமக்குடி அருகே கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட பக்தர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் விசாரணை நடத்தினார்.

Update: 2019-02-22 23:24 GMT

பரமக்குடி,

பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூர் கிராமத்தில் சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இதன்படி கடந்த 21–ந்தேதி மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை பஜனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அங்கு வந்திருந்த பக்தர்களுக்கு தக்காளி சாதம், வெஜிடபுள் பிரியாணி, சுண்டல் ஆகியவை அன்னதானமாக வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட பக்தர்கள் தங்களது வீடுகளுக்கு சென்றனர். இரவில் அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. சிலர் மயக்கமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுவர்கள், பெண்கள் என அனைவரும் உடனடியாக ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் மூலம் காட்டுப்பரமக்குடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அரசு ஆஸ்பத்திரியில் 72 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 39 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு அனைவரும் உடல்நலம் தேறி வீடுகளுக்கு சென்றனர். இதில் 6 பேர் மட்டும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு உடனடியாக வந்தார். அங்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார். டாக்டர்களிடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அன்னதான உணவை பரிசோதனைக்காக எடுத்து வைத்திருந்ததை பார்வையிட்டு அதன் பரிசோதனை முடிவினை தெரிவிக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு துறையினருக்கு அறிவுறுத்தினார்.

பின்பு அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் சென்று பார்வையிட்டதுடன் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். கலெக்டருடன் பரமக்குடி சப்–கலெக்டர் விஷ்ணு சந்திரன், உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சந்திரபோஸ், அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் நாகநாதன், சுகாதார துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணசாமி, பரமக்குடி தாசில்தார் பரமசிவன் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்