‘‘தேசநலனை காக்க மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்’’ பா.ஜனதா தலைவர் அமித்ஷா பேச்சு

தேசநலனை காக்க மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா பேசினார்.

Update: 2019-02-23 00:30 GMT

ராமநாதபுரம்,

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க நேற்று ராமநாதபுரம் வந்தார். ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள், மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் குழுவினரை அமித்ஷா சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான பா.ஜனதா பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொண்டு பேசியதாவது:–

பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலால் காஷ்மீரில் 40 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் தமிழகத்தை சேர்ந்த சுப்பிரமணியன், சிவசந்திரன் ஆகியோரும் தங்களது உயிரை தியாகம் செய்துள்ளனர். அவர்களின் உயிர் தியாகம் வீணாக இந்த அரசு அனுமதிக்காது. சரியான பதிலடி கொடுக்கப்படும்.

நாடாளுமன்ற தேர்தல் என்ற போரை சந்திக்க நாம் இங்கு ஒன்றுபட்டு இருக்கிறோம். இந்தியாவில் உள்ள பிற கட்சிகள் தங்களது வெற்றிக்கு அவர்களது தலைவர்களை தான் அடையாளம் சொல்வார்கள். ஆனால் பா.ஜனதா கட்சியின் வெற்றி என்பது இங்குள்ள பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கும் சொந்தம்.

தமிழகத்தில் 5 தொகுதிகளில் தான் பா.ஜனதா போட்டியிடுகிறது என்று நீங்கள் எண்ணக்கூடாது. அ.தி.மு.க., பா.ம.க. உள்பட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளும் நமது தொகுதிகள் தான். 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு உறுதி எடுக்க வேண்டும். இந்த வெற்றி மூலம் மோடி மீண்டும் பிரதமர் ஆவார். தேசநலனை காக்க அவர் மீண்டும் பிரதமர் ஆவது அவசியம்.

நமக்கு எதிராக தி.மு.க.வும், காங்கிரசும் இணைந்து இருக்கிறார்கள். இவர்கள் பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்த கூட்டணி. 2ஜி, நிலக்கரி என அனைத்து துறைகளிலும் ஊழல் செய்தார்கள். ஊழல் செய்வதற்காக இணைந்திருக்கும் இவர்களால் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கப்போவது இல்லை.

ராகுலும், ஸ்டாலினும், தமிழகத்திற்கு மோடி என்ன செய்தார்? என்று கேட்கிறார்கள். 10 ஆண்டுகள் மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தபோது தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்? உங்களது ஆட்சியில் தமிழகத்திற்கு நீங்கள் ஒதுக்கிய தொகை ரூ.94 ஆயிரத்து 500 கோடி.

ஆனால் கடந்த 2014–ம் ஆண்டு முதல் தற்போது வரை 5 ஆண்டுகால மோடி ஆட்சியில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதி ரூ.5 லட்சத்து 68 ஆயிரம் கோடி. உங்களை விட 5 மடங்கு அதிகமாக கொடுத்து இருக்கிறோம்..

மத்திய அரசின் பட்ஜெட்டில் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் நிதி விரைவில் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

ரூ.40 லட்சத்திற்கு உட்பட்டு வணிகம் செய்யும் வியாபாரிகளுக்கு ஜி.எஸ்.டி. பதிவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க தனி இலாகா ஏற்படுத்தப்படுகிறது. முறைசாரா தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் 60 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.

எதிர்க்கட்சி கூட்டணிக்கு ஒரு பிரதமர் கூட இல்லை. அந்த கூட்டணி வெற்றி பெற்றால் திங்கட்கிழமை மாயாவதி பிரதமராக இருப்பார். செவ்வாய்க்கிழமை அகிலேஷ், புதன்கிழமை சந்திரபாபுநாயுடு, வியாழக்கிழமை தேவேகவுடா, வெள்ளிக்கிழமை மம்தா, சனிக்கிழமை ஸ்டாலின். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. எனவே அன்று பிரதமர் கிடையாது.

நமது கூட்டணிக்கு பிரதமர் மோடி இருக்கிறார். அவர் மீண்டும் 5 ஆண்டுகள் ஆட்சி செய்தால் உலகில் இந்தியா சக்திபெற்ற நாடாக மாறும். எனவே மீண்டும் மோடி பிரதமராவதற்கு தமிழக மக்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்