அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றி சென்ற 4 பள்ளிக்கூட வாகனங்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை

மார்த்தாண்டம் பகுதியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், அதிக எண்ணிக்கையில் மாணவ–மாணவிகளை ஏற்றி சென்ற 4 தனியார் பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2019-02-23 23:00 GMT
களியக்காவிளை,

மார்த்தாண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் தனியார் பள்ளி வாகனங்களில் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் மாணவ– மாணவிகளை ஏற்றி செல்வதாகவும், இதனால் விபத்துகள் ஏற்படுவதாகவும் புகார்கள் வந்தன. இதையடுத்து மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அதிகாரி பழனிசாமி மற்றும் அதிகாரிகள் மேல்புறம், இடைக்கோடு, புலியூர்சாலை போன்ற பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, அந்த வழியாக மாணவ–மாணவிகளை ஏற்றி சென்ற தனியார் பள்ளி வாகனங்களை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தனர்.

இதில், அதிக எண்ணிக்கையில் மாணவ–மாணவிகளை ஏற்றி சென்றதாகவும், உரிய அனுமதியின்றி இயங்கியதாகவும் 4 பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அந்த வாகனங்களில் இருந்த மாணவ–மாணவிகளை பள்ளியில் இறக்கி விட்டு விட்டு, வாகனங்களை கோழிப்போர்விளையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

இதுபோன்ற சோதனைகள் தொடரும் என்றும், விதிமுறைகளை மீறி இயங்கும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வட்டார போக்குவரத்து அதிகாரி பழனிசாமி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்