பெரம்பலூரில் அங்கன்வாடி உதவியாளர் பணிகளுக்கான நேர்காணல் 34 காலி இடங்களுக்கு 576 பெண்கள் வந்திருந்தனர்

பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி உதவியாளர் பணிகளுக்கான நேர்காணல் பெரம்பலூரில் நடந்தது. இதில் 34 காலி பணி இடங்களுக்கு 576 பெண்கள் வந்திருந்தனர்.

Update: 2019-02-23 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் காலியாக உள்ள 14 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 34 அங்கன்வாடி உதவியாளர்கள் பணிகளுக்கு தகுதியானவர்கள் கடந்த 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி அங்கன்வாடி பணியாளர் காலி இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் நேர்காணல் நடந்தது. இதில் 14 காலி இடங்களுக்கு 557 பேர் நேர்காணலில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் அங்கன்வாடி உதவியாளர் பணியில் உள்ள 34 காலி இடங்களுக்கு 20 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட பெண்கள், மலைப்பகுதியில் வசிக்கும் அதிகபட்சம் 45 வயதுடைய பெண்கள், கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என 700-க்கும் மேற்பட்டடோர் விண்ணப்பித்திருந்தனர். அங்கன்வாடி உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறை அதிகாரி பூங்கொடி தலைமையில் நேற்று நேர்காணல் நடைபெற்றது.

இதில் பெரம்பலூர் வட்டாரத்தில் 12 அங்கன்வாடி உதவியாளர்கள் காலி பணி இடங்களுக்கு 215 பேரும், வேப்பூரில் 10 காலி பணி இடங்களுக்கு 166 பேரும், ஆலத்தூரில் 8 காலி பணி இடங்களுக்கு 104 பேரும், வேப்பந்தட்டையில் 4 இடங்களுக்கு 91 பேரும் என மாவட்டத்தில் 34 அங்கன்வாடி பணியாளர்கள் காலி பணியிடத்திற்கான நேர்காணலுக்கு மொத்தம் 576 பேர் வந்திருந்தனர். அவர்களுக்கு வட்டார அளவில் தனித்தனியாக 4 இடங்களில் அதிகாரிகள் நேர்காணலை நடத்தினர். தேர்ந்தெடுக்கப்படும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு சிறப்பு நிலை ஊதியமாக ரூ.4,100 வழங்கப்படும் என அதிகாரி பூங்கொடி தெரிவித்தார். அங்கன்வாடி உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் அந்த பணியிடத்திற்கான நேர்காணலுக்கு இளநிலை பட்டப்படிப்பு முடித்த ஏராளமான பெண்கள் வந்திருந்தனர். மேலும் பலர் தனது கைக்குழந்தைகள், கணவன்மார்கள், பெற்றோர், உறவினர்களை அழைத்து வந்திருந்தனர். 

மேலும் செய்திகள்