கரூர் அமராவதி ஆற்றில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்

கரூர் அமராவதி ஆற்றிலுள்ள சீமைக்கரு வேல மரங்களை அகற்றும் பணியை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

Update: 2019-02-23 23:00 GMT
கரூர்,

கரூர் நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் அமராவதி ஆற்றில் சீமைக்கருவேல மரங்கள் மண்டியிருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், எனவே அதனை அகற்றுவதோடு ஆற்றினை சுத்தப்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் பேரில் ரூ.6 லட்சத்து 3 ஆயிரம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு, திருமாநிலையூர் லைட்அவுஸ் கார்னர் பகுதி யிலிருந்து அமராவதி ஆற்றில் சீமைக்கருவேலமரங்களை அகற்றி சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அந்த வகையில் நேற்று காலை அங்கு பொக்லைன் எந்திரங்கள் மூலம் சீமைக்கருவேல மரங்களை வேரோடு அகற்றும் பணியை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

இதைத்தொடர்ந்து, கரூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலை மேம்பாட்டுப்பணி, குடிநீர் பணி மற்றும் ராமச்சந்திரபுரம், ஜீவா நகர், மாரியம்மன் நகர் ,வாங்கப்பாளையம், சின்னக்குளத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகாலினை ரூ.8 கோடியே 5 லட்சம் மதிப்பில் அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.10 கோடியே 56 லட்சம் மதிப்பிலான பணிகளையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜேந்திரன், பொதுப்பணித்துறை உதவிசெயற்பொறியாளர் சரவணன், வட்டாட்சியர் ஈஸ்வரன் மற்றும் மாவட்ட துணை செயலாளர் சிவசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயராஜ், நகர செயலாளர் நெடுஞ்செழியன், முன்னாள் நகர்மன்ற தலைவர் செல்வராஜ், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்