நூல் வாங்கி ரூ.15½ லட்சம் மோசடி: கணவர் கைது; மனைவிக்கு வலைவீச்சு

நூல் வாங்கி ரூ.15½ லட்சம் மோசடி செய்ததாக கணவர் கைது செய்யப்பட்டார். மனைவியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-02-23 23:15 GMT

ஈரோடு,

ஈரோடு வீரப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர், ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:–

நானும், ஈரோடு பழையபாளையம் இந்திராகாந்தி வீதியை சேர்ந்த ஸ்ரீகாந்த், ஜெகநாதன், மீனாதேவி ஆகியோரும் சேர்ந்து நூல் நிறுவனம் நடத்தி வருகிறோம். ஈரோடு பழையபாளையம் இந்திராகாந்தி வீதியை சேர்ந்த ஜோதிமணி (வயது 61) மற்றும் அவரது மனைவி அம்சவேணி ஆகிய இருவரும் கடந்த 2017–ம் ஆண்டு அக்டோபர் மாதம் எங்கள் நிறுவனத்திற்கு வந்தனர்.

அப்போது அவர்கள், நாங்கள் கோட்டை முனியப்பன் கோவில் வீதியில் பல ஆண்டுகளாக ஜவுளி மற்றும் நூல் வியாபாரம் செய்து வருகிறோம். தங்களுக்கு நூல்களை அதிக அளவு கடன் அடிப்படையில் விற்பனைக்கு கொடுத்தால், உடனுக்குடன் ரொக்கமாக பணம் கொடுத்து விடுவதாக ஆசை வார்த்தை கூறினார்கள்.

அதை நம்பிய நாங்கள் கடந்த 2017–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9–ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 13–ந் தேதி வரை 5 முறை ரூ.15 லட்சத்து 42 ஆயிரத்து 151 மதிப்புள்ள நூல்களை அவர்களுக்கு அனுப்பி வைத்தோம். அதற்குண்டான பணத்தை ஒரு மாத காலத்திற்குள் ரொக்கமாக கொடுத்து விடுவதாக அவர்கள் கூறினர். ஆனால் தற்போது வரை பணம் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 13–ந் தேதி எங்கள் நிறுவனத்தின் மேலாளர் சங்கர் மற்றும் பணியாளர் வெற்றிவேல் ஆகியோர், ஜோதிமணியின் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டுள்ளனர். அப்போது அவர்கள், பணம் தற்போது இல்லை. 6 மாதம் கழித்து தான் கொடுக்க முடியும் என்று கூறி உள்ளனர்.

மேலும் இதுகுறித்து நாங்கள் கேட்டதற்கு, எங்களை தகாத வார்த்தைகளால் திட்டி, பணம் தரமுடியாது என்றும், பணம் கேட்டால் உயிரோடு போகமுடியாது என்றும் மிரட்டினர். எனவே எங்களிடம் நூல் வாங்கி பணம் தராமல் ஏமாற்றி மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்த அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் எங்களுக்கு சேரவேண்டிய நூல்களுக்கான பணத்தையும் பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோதிமணியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அம்சவேணியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்