புஞ்சைபுளியம்பட்டியில் பரபரப்பு மின்கம்பியில் உரசி பஞ்சுபேல் ஏற்றிவந்த லாரி தீப்பிடித்து எரிந்தது

மின்கம்பியில் உரசி பஞ்சுபேல் ஏற்றிவந்த லாரி தீப்பிடித்து எரிந்ததால், புஞ்சைபுளியம்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-23 22:30 GMT

புஞ்சைபுளியம்பட்டி,

சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து ஒரு லாரி பஞ்சு பேல்களை ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நூல் மில்லுக்கு வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை மேட்டூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 28) என்பவர் ஓட்டி வந்தார். உடன் கிளீனரும், தொழிலாளர்கள் 3 பேரும் இருந்தனர்.

புஞ்சைபுளியம்பட்டி–மேட்டுப்பாளையம் ரோட்டில் ஜே.ஜே.நகர் என்ற இடத்தில் சென்றபோது லாரிக்கு மேலே மின்ஒயர் சென்றது. இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக பஞ்சு பேல்கள் மின்ஒயரில் உரசியது. உடனே பஞ்சு பேல்கள் தீப்பிடித்து எரிந்தது.

மளமளவென பரவிய தீ லாரி முழுவதும் பிடித்து எரிந்தது. இதனால் டிரைவரும், கிளீனரும், தொழிலாளர்களும் லாரியை விட்டு இறங்கி உயிர் தப்பினர். அதன்பின்னர் இதுபற்றி அவினாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வந்து லாரியில் இருந்து பஞ்சு பேல்களை அப்புறப்படுத்தி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இதையடுத்து சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்தில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அவினாசி தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து போராடி தீயை அணைத்தனர். எனினும் லாரி முழுவதும் எரிந்து நாசம் ஆனது. இந்த தீ விபத்தால் புஞ்சைபுளியம்பட்டி–மேட்டுப்பாளையம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. மேலும் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக தீ விபத்துக்குள்ளான அந்த லாரி புஞ்சைபுளியம்பட்டி–நம்பியூர் ரோட்டில் வந்தபோது அளவுக்கு அதிகமாக ஏற்றியிருந்த பஞ்சு பேல்கள் மின்ஒயரில் பட்டது. இதில் மின்ஒயர் அறுந்து தொங்கியது. இதனால் அந்த பகுதியில் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய ஊழியர்கள் புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

டிரைவர் அபராதத்தை செலுத்தியதை தொடர்ந்து அவரை செல்ல அனுமதித்தனர். அதன்பின்னர் லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் தீவிபத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்