காதலியுடன் காட்டுப்பகுதியில் சென்றபோது தகராறு: என்ஜினீயரிங் மாணவர் கொலை வழக்கில் 2 பேர் கைது

காதலியுடன் காட்டுப் பகுதியில் சென்ற என்ஜினீயரிங் மாணவரை கொலை செய்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-02-23 22:15 GMT
திருச்சி,

திருச்சியை அடுத்த சிறுகனூர் அருகே உள்ள திண்ணக்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் தமிழ்வாணன்(வயது 21). இவர் சமயபுரம் அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வரும் 20 வயதுடைய மாணவியை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்ததில் இருந்தே நட்புடன் பழகி வந்தனர். பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 15-ந் தேதி காதல்ஜோடி கொணலையில் உள்ள தேவாலயத்துக்கு சென்று விட்டு பின்னர் குமுளூர் காட்டுப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

அங்கு இருவரும் தனிமையில் பேசி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த 2 பேர் காதல்ஜோடியிடம் ஏன்?. இங்கு நிற்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அப்போது தமிழ்வாணனுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த ஒருவர் தான் வைத்து இருந்த கத்தியால் தமிழ்வாணனின் வலது தொடையில் குத்தினார். பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி 108 ஆம்புலன்ஸ் மூலம் தமிழ்வாணனை லால்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின்பேரில், லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜசேகர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினார்கள்.

மேலும், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தொலைவில் மெயின்ரோட்டில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் பல்வேறு தரப்பிலும் விசாரித்தனர். விசாரணையில் லால்குடி புஞ்சை சங்கேந்தியை சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளிகளான கார்த்திகேயன்(24), பிரதாப்(21) ஆகியோர் தான் தமிழ்வாணனை கொலை செய்தனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் நிருபர்களிடம் கூறுகையில், “காட்டுப்பகுதியில் காதல் ஜோடி நின்று பேசி கொண்டு இருந்ததை கண்ட 2 பேரும் அவர்களை மிரட்டி உள்ளனர். கொலை செய்யப்பட்ட தமிழ்வாணன் கபடி விளையாட்டு வீரர் என்பதால் அவர்களை துணிச்சலுடன் எதிர்த்து சண்டை போட்டுள்ளார். அப்போது கார்த்திகேயன் தனது மோட்டார் சைக்கிளில் வைத்து இருந்த கத்தியை எடுத்து வந்து மிரட்டி உள்ளார்.

ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட தள்ளு, முள்ளுவில் கார்த்திகேயன் மார்பில் கத்திகுத்து விழுந்தது. இதனால் அவர்கள் 2 பேரும் ஆத்திரம் அடைந்தனர். உடனே தமிழ்வாணனின் தொடையில் கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். ஆனால் ரத்தம் அதிகமாக வெளியேறியதால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்து விட்டார்.

தற்போது 2 பேரையும் கைது செய்துள்ளோம். சமயபுரம் அருகே நடந்த வங்கி கொள்ளை தொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் குற்றவாளிகளை பிடிப்போம்” என்றார். 

மேலும் செய்திகள்