மதுரையில் வீட்டில் பதுக்கிய துப்பாக்கி-13 தோட்டாக்கள் பறிமுதல் வாலிபர் கைது

வீட்டில் துப்பாக்கி, 13 தோட்டாக்கள் பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-02-23 23:35 GMT
மதுரை,

மதுரை அண்ணாநகர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் போலீசாரிடம் முன்னுக்குபின் முரணாக பேசியுள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது, மேலஅனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் கல்யாணசுந்தரம் என்ற பாலசுந்தரம் (வயது 35) என்பது தெரியவந்தது. ரவுடியாக வலம் வந்த அவர், கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த கொலை தொடர்பாகவும் செல்லூர் போலீசார் முன்பு அவரை கைது செய்துள்ளனர்.

பின்னர் அவரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் கல்யாணசுந்தரத்திடம் துப்பாக்கி இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவரது வீட்டிற்கு நேற்று மதியம் சென்று திடீர் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 9 எம்.எம். ரக துப்பாக்கி ஒன்திறையும், 13 தோட்டாக்களையும் கைப்பற்றினர். அதில் 2 தோட்டாக்கள் வெடித்த நிலையில் இருப்பதையும் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்யாணசுந்தரத்தை கைது செய்தனர். அவரிடம் துப்பாக்கி எப்படி வந்தது என்றும், அதில் 2 தோட்டாக்கள் வெடித்த நிலையில் இருப்பதற்கான காரணம் என்ன? என்பது குறித்தும் போலீசார் துருவித் துருவி விசாரித்தனர். அதற்கு அவர், 2010-ம் ஆண்டு திருப்பூரில் துப்பாக்கி வாங்கியதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர் யாரிடம் துப்பாக்கி வாங்கினார்? எதற்காக வாங்கினார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்