இலங்கை கடற்படையை கண்டித்து பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கினர்

இலங்கை கடற்படையை கண்டித்து பாம்பன் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

Update: 2019-02-23 23:41 GMT
ராமேசுவரம்,

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், விரட்டியடிக்கப்படுவதும், சிறைபிடித்து செல்லப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய-மாநில அரசுகளை மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் பாம்பனில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கொலம்பஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும், அவர் உள்பட 5 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். அவர்கள் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இலங்கை கடற்படையை கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து படகுகள் மற்றும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாம்பன் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.

இதனால் பாம்பன் கடல் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

மேலும் செய்திகள்