பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து கறம்பக்குடியில் கடையடைப்பு

பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து கறம்பக்குடியில் கடையடைப்பு மற்றும் அனைத்து கட்சியினர், வியாபாரிகள் பங்கேற்ற மவுன ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2019-02-25 23:00 GMT
கறம்பக்குடி,

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதில் பலியான ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அனைத்து கட்சிகள் மற்றும் வியாபாரிகள் சார்பில் நேற்று கடையடைப்பு மற்றும் மவுன ஊர்வலம் நடைபெற்றது. மவுன ஊர்வலம் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் இருந்து புறப்பட்டு திருவோணம் சாலை, வாணிய தெரு, கடைவீதி, பஸ் நிலையம் வழியாக சென்று வள்ளுவர் திடலில் நிறைவடைந்தது.

ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்து இருந்தனர். இதையொட்டி நேற்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை கறம்பக்குடியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

மவுன ஊர்வலத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், அ.ம.மு.க., மக்கள் பாதை மற்றும் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள், மாணவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற வீரவணக்க அஞ்சலி கூட்டத்திற்கு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் விஜயரவி பல்லவராயர் தலைமை தாங்கினார்.

அனைத்து கட்சி பிரமுகர்கள் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்தினர். ராணுவ வீரர்களின் உருவப்படத்திற்கு மாணவர்கள் மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

மேலும் செய்திகள்