“லஞ்சம் வாங்குபவர்களை தூக்கில் போட வேண்டும்” மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

“லஞ்சம் வாங்குபவர்களை தூக்கில் போட வேண்டும்” என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் பரபரப்பு கருத்தை தெரிவித்தனர்.

Update: 2019-02-25 22:45 GMT
மதுரை,

மதுரை சூர்யா நகரைச் சேர்ந்த பரணிபாரதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் எம்.இ. பட்டதாரி. மின் வாரியத்தில் புதிதாக 325 உதவி பொறியாளர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்த பணிகளுக்காக கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட எழுத்துத்தேர்வை நான் எழுதினேன். ஆனால் எழுத்துத்தேர்வு நடப்பதற்கு முன்பாகவே கேள்வித்தாள் வெளியானது.

சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு, தங்களுக்கு வேண்டியர்களிடம் கேள்வித்தாள் விவரங்களை தேர்வுக்கு முன்பே தெரிவித்துவிட்டனர்.

இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கடந்த 3-ந்தேதி உத்தரவிட்டார். இந்த விசாரணை முடிந்தும் கேள்வித்தாள் வெளியானது எப்படி? என்பதற்கு விளக்கம் கொடுக்கப்படவில்லை.

இதற்கிடையே 1,575 பேரை தேர்ந்தெடுத்து சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டது.

கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வராமலேயே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்தது சட்டவிரோதம்.

எனவே மின்வாரிய உதவி பொறியாளர் பணி நியமனத்துக்கான நடவடிக்கைகளுக்கும், பணி நியமன உத்தரவு அளிக்கவும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

மேலும் கடந்த டிசம்பர் மாதம் நடந்த உதவி பொறியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வை ரத்து செய்துவிட்டு, புதிதாக எழுத்துத்தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “மனுதாரர் பங்கேற்ற தேர்வில் செல்போன் உள்பட எந்த மின்னணு சாதனமும் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அப்படியானால், அந்த தேர்வு முடிந்த சில மணி நேரத்தில் தேர்வில் கேட்கப்பட்ட 120 கேள்விகளும், அதற்கான விடைகளும் சமூக வலைத்தளங்களில் வெளியானது எப்படி?” என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், “அரசுத்துறைகளில் அனைத்து நிலைகளிலும் லஞ்சம் வாங்கும் பழக்கம் உள்ளது. கண்காணிப்பு கேமரா, செல்போன் மூலம் அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் நிகழ்வுகள் அடிக்கடி வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. ஆனாலும் அது தொடர்கிறது.

லஞ்சம் வாங்கும் பழக்கம் முழுமையாக ஒழிய வேண்டும் என்றால், லஞ்சம் வாங்குபவர்களை தூக்கில் போட வேண்டும் அல்லது அவர்களின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். அவர்கள் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்ற கடுமையான தண்டனைகளை அளித்தால் தான் லஞ்சம் ஒழியும். லஞ்சம் வாங்குவது எதார்த்தமானது என்னும் நிலையையும் மாற்ற முடியும்“ எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

பின்னர் மின்வாரிய உதவி பொறியாளர் பணி நியமன விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் எனவும் தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை வருகிற 1-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்