தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதி - கலெக்டர் தகவல்

தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என கலெக்டர் டி.ஜி.வினய் கூறினார்.

Update: 2019-02-25 22:45 GMT
திண்டுக்கல்,

தமிழகத்தில் தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் 200 பேருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிமூலம் ஆண்டுதோறும் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு அவர்கள் கல்வி பயிலும் 4 ஆண்டுகளில் ஏதாவது ஒரு ஆண்டில் ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

புதிதாக தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் மட்டும் இந்த திட்டத்தில் பயன்பெறலாம். அரசின் முகமை மூலம் நடத்தப்படும் ஒற்றை சாளர முறையில் தொழிற்கல்வி மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டில் தொழிற்கல்வியில் சேர்ந்த மாணவர்கள் நிதியுதவி பெற இயலாது.

தமிழகத்தில் இருப்பிட சான்று பெற்றவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரமாக இருக்க வேண்டும். முதல் தலைமுறை பட்டதாரி கல்வி கட்டணம் பெறும் மாணவர்கள், கல்வி உதவி தொகை பெறும் விவசாயிகளின் மகன்கள், மகள்கள், இறந்த அரசு பணியாளர்களின் மகன்கள், மகள்கள், ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் மகன்கள், மகள்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற இயலாது.

தொழிற்கல்வி படிக்க நிதியுதவி பெற விரும்பும் மாணவர்கள் பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல் நகல், தமிழகத்தில் வசிப்பவர் என்பதற்கான சான்றிதழ், குடும்ப தலைவரின் ஆண்டு வருமான சான்றிதழ், இருப்பிடச்சான்று மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வயது, கல்வித்தகுதி சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை www.di-n-d-i-gul.tn.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அறை எண் 77-ல் உள்ள அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்