புகைப்பட கலைஞரை மிரட்டி பணம் பறிப்பு சுங்க அதிகாரிகள் 2 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு

புகைப்பட கலைஞரை மிரட்டி பணம் பறித்த சுங்க அதிகாரிகள் 2 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

Update: 2019-02-25 22:00 GMT
மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சம்பவத்தன்று புகைப்பட கலைஞர் ஒருவர் நண்பருடன் கத்தாருக்கு செல்ல இருந்தார். அப்போது, அவரை சுங்கத்துறை கண்காணிப்பாளர் வாசுதேவ் நிவானே, தலைமை காவலர் ஜே.எஸ்.மோந்த்கர் ஆகியோர் வழிமறித்து உள்ளனர். அவர்கள் உரிய அனுமதி இன்றி விலை உயர்ந்த கேமராக்களை கொண்டு செல்வதற்காக புகைப்பட கலைஞர் மீது நடவடிக்கை எடுப்போம் என மிரட்டினர்.

மேலும் நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.5 ஆயிரம் தரவேண்டும் என கூறினர். விமானத்திற்கு நேரமானதால் புகைப்பட கலைஞர் சுங்க அதிகாரிகளுக்கு ரூ.4 ஆயிரத்தை கொடுத்தார்.

முன்னதாக அவர் சுங்க அதிகாரிகளுக்கு பணம் கொடுத்ததை யாருக்கும் தெரியாமல் வீடியோ எடுத்து இருந்தார். இந்தநிலையில் பணி முடிந்த பின்பு நாடு திரும்பிய அவர் சம்பவம் குறித்து சி.பி.ஐ.யில் புகார் அளித்தார்.

இந்த புகார் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் சுங்க அதிகாரிகள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்