கெருடாமுத்தூர் பகுதியில் அடிப்படை வசதி கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர் பள்ளி மாணவ –மாணவிகள் பங்கேற்றனர்

பொங்கலூர் அருகே கெருடாமுத்தூர் பகுதியில் அடிப்படை வசதி கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று பொதுமக்கள், பள்ளி மாணவ–மாணவிகளுடன் வந்து முற்றுகையிட்டனர்.

Update: 2019-02-26 23:00 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வி.வடமலைபாளையம் ஊராட்சி கெருடாமுத்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி மாணவ–மாணவிகளுடன் 100–க்கும் மேற்பட்டவர்கள் நேற்றுகாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தமிழ்முத்து தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். தங்கள் பகுதியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி கலெக்டர் அலுவலக நுழைவுவாசல் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

பின்னர் அங்கிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய நபர்களை மட்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க அழைத்துச்சென்றனர். கலெக்டரிடம் அளித்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

கெருடாமுத்தூர் பகுதியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு அரசு பள்ளி, வீடுகளின் மேற்பகுதியில் காற்றாலை உயர்மின் கம்பிகள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். எங்கள் பகுதியில் உள்ள மயான நிலத்தை அழித்து காற்றாலை கம்பங்கள் போடப்பட்டுள்ளது. சாலை வசதியுடன் மயான வசதி ஏற்படுத்த வேண்டும்.

இங்குள்ள வீடுகளுக்கு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை குறைந்தழுத்த மின்சாரம் வருவதால் மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் மாணவ–மாணவிகள் படிக்க முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர். பொதுவான நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு எங்கள் பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும். கழிப்பிட வசதி, தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும். எங்கள் பகுதியில் பஸ் போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும். கெருடாமுத்தூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் தெருவிளக்குகள் குறைவாக உள்ளன. அவை முறையாக எரிவதில்லை. தெருவிளக்கு வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, கெருடாமுத்தூர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்