நிலமோசடி வழக்கு, கோர்ட்டு ஊழியர்களுக்கு ரூ.15 லட்சத்தை திருப்பி கொடுக்க வேண்டும்

நிலமோசடி வழக்கில் ரூ.15 லட்சத்தை கோர்ட்டு ஊழியர்களுக்கு 3 மாதத்தில் திருப்பி கொடுக்க வேண்டும் என்று ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-02-26 22:30 GMT
வேலூர், 

வேலூரை சேர்ந்தவர் பார்த்தசாரதி, கோர்ட்டு ஊழியர். இவர் மற்றும் வேலூர் கோர்ட்டில் பணிபுரியும் தட்டச்சர்கள், கோர்ட்டு அலுவலக உதவியாளர்கள் என 16 பேர் ஒரே இடத்தில் நிலம் வாங்க முடிவு செய்தனர். இதற்காக, அவர்கள் கார்ணம்பட்டு பகுதி 1-ல் வசிக்கும் ரியல் எஸ்டேட் உரிமையாளர் சுப்பிரமணி, அவருடைய மகன் ராஜ்கமல் ஆகியோரை அணுகினர். அவர்கள் இருவரும் சத்துவாச்சாரி அலமேலுமங்காபுரத்தில் 1 ஏக்கர் 14 சென்ட் நிலம் இருப்பதாகவும், ரூ.15 லட்சம் கொடுத்தால் அதனை வாங்கி தருவதாகவும் கூறி உள்ளனர்.

இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு கோர்ட்டு ஊழியர்கள் ரூ.15 லட்சம் கொடுத்துள்ளனர். ஆனால் சில மாதங்களாகியும் சுப்பிரமணி, நிலத்தை வாங்கி கொடுக்கவில்லை. அந்த நிலத்தை சுப்பிரமணி, ஏற்கனவே மும்பையை சேர்ந்த தனியார் தொழிற்சாலைக்கு ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருப்பது கோர்ட்டு ஊழியர்களுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து கோர்ட்டு ஊழியர்கள், சுப்பிரமணியிடம் கொடுத்த ரூ.20 லட்சத்தைத் திரும்ப கேட்டனர். ஆனால் அவர் ரூ.5 லட்சத்தை கொடுத்துவிட்டு, மீதமுள்ள ரூ.15 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இதுதொடர்பாக பார்த்தசாரதி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சுப்பிரமணி, ராஜ்கமல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சுப்பிரமணி நிலமோசடி வழக்கில் போலீசார் கைது செய்வதற்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி, சுப்பிரமணியிடம் மீதமுள்ள பணத்தை எப்போது கொடுப்பீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் ஒருசில மாதங்களில் கொடுப்பேன் என கூறினார்.

இதையடுத்து நீதிபதி, நிலம் வாங்கி தருவதாக கோர்ட்டு ஊழியர்களிடம் ரூ.15 லட்சத்தை 3 மாதத்தில் திருப்பி கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் பணத்தை திருப்பி கொடுத்தவுடன் நிலமோசடி தொடர்பாக பதிவு செய்துள்ள வழக்கு ரத்து செய்யப்படும் என்று கூறினார். ஐகோர்ட்டு உத்தரவின்படி சுப்பிரமணி, ராஜ்கமலை கைது செய்யவில்லை என்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்