அணைக்கரை செக்போஸ்டில் பணியில் இருந்த போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி விட்டு விபரீத முடிவு

அணைக்கரை செக்போஸ்டில் பணியில் இருந்த போலீஸ் காரர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிவிட்டு அவர் இந்த விபரீத முடிவை மேற்கொண்டார்.

Update: 2019-02-27 22:45 GMT
திருப்பனந்தாள்,

கடலூர் மாவட்டம் கீழமூங்கிலடி தில்லைநாயக புரம் அலன்ஜிமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவரது மகன் உதயகுமார் ராஜ்(வயது 25). இவர், தஞ்சை ஆயுதப் படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்றுமுன்தினம் இவருக்கு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அணைக்கரை செக்போஸ்ட்டில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து அவர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பணியில் இருந்த உதயகுமார் ராஜ், தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். அப்போது தன்னுடன் பணியில் இருந்தவர்களுக்கும், அந்த வழியாக வந்தவர்களுக்கும் கேக் மற்றும் சாக்லெட்டுகளை வழங்கி உள்ளார்.

சிறிது நேரம் கழித்து அருகில் இருந்தவர்கள் பார்த்தபோது, உதயகுமார் ராஜ் மயங்கிய நிலையில் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து உடனடியாக அவரை சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


போலீஸ்காரர் உதயகுமார் ராஜ் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது ஏன்? என்பது குறித்து திருப்பனந்தாள் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், உதயகுமார் ராஜூக்கு ஜெயலெட்சுமி என்ற தாயும், நந்தினி என்ற தங்கையும் உள்ளனர். நந்தினி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் உதயகுமார் ராஜுக்கு தெரிய வந்தது. தனது தங்கை ஒருவரை காதலிப்பது அவருக்கு பிடிக்கவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த அவர் நேற்று முன்தினம் தனது பிறந்த நாளை கொண்டாடி விட்டு, விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்