நெல்லை அருகே கல்லூரி மாணவர் கொலை: 5 வாலிபர்கள் அதிரடி கைது உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

நெல்லை அருகே கல்லூரி மாணவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 5 வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Update: 2019-02-27 22:15 GMT
நெல்லை, 

நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் மருதம்நகரை சேர்ந்த உசையகுமார் மகன் ராஜா (வயது 19). இவர், அந்த பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாவது ஆண்டு படித்து வந்தார். கடந்த 25-ந்தேதி மாலையில் ராஜா கல்லூரி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

முன்னீர்பள்ளம் சிவன் கோவில் அருகே வந்தபோது மர்மநபர்கள் அவரை வழிமறித்து வெட்டிக்கொலை செய்தனர். இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஸ்ராவத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த படுகொலை சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழமுன்னீர்பள்ளத்தில் ஒரு பிரிவை சேர்ந்தவரின் இறுதி ஊர்வலத்தில் சென்ற சிலர் மற்றொரு பிரிவை சேர்ந்தவர்களின் வீடுகளில் பூக்களை தூவியபடி சென்றனர். இதை அவர்கள் தட்டிக்கேட்டதால் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த முன்விரோதம் காரணமாக ராஜா கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கொலையாளிகள் என சந்தேகப்படும் 4 பேர் உள்பட 19 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். தீவிர விசாரணைக்கு பின்னர், அந்த கொலையில் தொடர்புடைய 4 பேர் தவிர மற்றவர்களை போலீசார் விடுவித்தனர்.

இந்த நிலையில் முன்னீர்பள்ளம் பகுதியில் நேற்று 3-வது நாளாகவும் பதற்றம் நீடித்தது. ராஜாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள், அந்த கிராமத்திலேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

அவர்களிடம் போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து ராஜாவின் உடலை பெற்றுக்கொள்வதாக உறவினர்கள் தெரிவித்தனர். பின்னர் நேற்று மாலை 3 மணிக்கு உறவினர்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு ராஜாவின் உடலை பெற்றுக்கொண்டனர்.

இதற்கிடையே, இந்த கொலை வழக்கு தொடர்பாக கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்த சங்கர், அருணாசலம் (19) உள்பட 5 பேரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேர், 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பதால், அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர் செய்து, நாங்குநேரி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். மற்ற 2 பேர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்