ராசிபுரம் கிளை சிறையில் ஆவணங்களை கிழித்து எறிந்த சிறைக்காவலர் பணி இடமாற்றம்

ராசிபுரம் கிளை சிறையில் ஆவணங்களை கிழித்து எறிந்த சிறைக் காவலர் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.

Update: 2019-02-27 22:45 GMT
ராசிபுரம், 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ராசிபுரம் கிளை சிறைச்சாலையில் 6 இளம் சிறார் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறைச்சாலையில் சிறை கண்காணிப்பாளர், ஏட்டுகள், வார்டன்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இங்கு பணியாற்றி வரும் சிலர் பணி நேரத்தில் அடிக்கடி செல்போனில் பேசுவது, ஓரிருவர் மது அருந்திவிட்டு பணிக்கு வருவதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காலை நேரத்தில் பணிக்கு வந்த சிறைச்சாலை முதல் நிலைக் காவலர் ஒருவர் மது அருந்திவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த சிறைச்சாலை கண்காணிப்பாளர் அவரை எச்சரித்து பணிக்கு வரவேண்டாம் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் அந்த முதல் நிலைக்காவலர், சிறைச்சாலை கண்காணிப்பாளரை பழிவாங்கும் நோக்கத்தில் நேற்று முன்தினம் இரவு பணிக்கு வந்து இருக்கிறார். பின்னர் அவர் சிறைச்சாலையின் ஆவணத்தை கிழித்து கழிவறைக்குள் வீசிவிட்டதாக தெரிகிறது. காலையில் அந்த ஆவணத்தை சிறைச்சாலை கண்காணிப்பாளர் தேடியபோது காணவில்லை. சிறைச்சாலைக்குள் அவர் தேடிய போதுதான் அந்த ஆவணத்தை கிழித்துபோட்டது தெரிந்தது.

இது பற்றி சேலம் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் நேற்று நேரில் வந்து விசாரணை நடத்தினார். அவர் நடத்திய விசாரணையின் பேரில் ஆவணத்தை கிழித்துபோட்டதாக சிறைச்சாலை முதல்நிலைக்காவலர் சேலம் தம்மம்பட்டியை சேர்ந்த தனபால் என்பவர் சேலம் மத்திய சிறைச்சாலைக்கு இடமாறுதல் செய்து உத்தரவிட்டார். அதன் பேரில் தனபால் சேலம் மத்திய சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

சிறைச்சாலையில் பணியாற்றியவரே ஆவணங்களை கிழித்து போட்டது ராசிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்