தமிழகத்தில் கோடை காலத்தில் மின்வெட்டு இருக்காது அமைச்சர் தங்கமணி பேட்டி

தமிழகத்தில் கோடை காலத்தில் மின்வெட்டு இருக்காது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.

Update: 2019-02-28 22:00 GMT
மோகனூர், 

நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா அலுவலகம் அருகே முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த இறந்தவர்களின் உடல் அடக்கம் செய்யும் இடத்தில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் நிதியில் இருந்து ரூ.2.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்தது. பணி முடிவடைந்ததை தொடர்ந்து சுற்றுச்சுவர் திறப்பு விழா நடந்தது.

விழாவிற்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்துகொண்டு சுற்றுச்சுவரை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோடை காலத்திற்கும் குறைந்த மின் அழுத்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கோடை காலத்தில் மின் தேவை 15 ஆயிரம் மெகா வாட் அளவிற்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு தேவையான அளவிற்கு மின் உற்பத்தி இருப்பதால் தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது. மின்துறையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் வருகிற 6-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

கஜா புயல் நேரத்தில் அவர்கள் எந்த அளவிற்கு வேலை செய்தார்கள் என்பதை நானும் கண்கூடாக பார்த்தேன். அவர்களது கோரிக்கைகளை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளேன். அவரும் பரிசீலனை செய்வதாக கூறியுள்ளார். எனவே ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன் வரவேண்டும். அரசு நிச்சயமாக கனிவோடு அவர்களது கோரிக்கைகளை பரிசீலிக்கும். உயர்மின்கோபுரம் அமைக்கும் விவகாரத்தில் ஐகோர்ட்டு உத்தரவின்படி விவசாயிகளிடையே பேச்சுவார்த்தை நடத்த அரசும் அதிகாரிகளும் தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் அமைச்சர் சரோஜா, சுந்தரம் எம்.பி, பாஸ்கர் எம்.எல்.ஏ, மோகனூர் பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி, மாவட்ட மாணவரணி செயலாளர் சந்திரமோகன், ஒன்றிய செயலாளர் கருமண்ணன், நகர செயலாளர் தங்கமுத்து, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் புரட்சிபாலு, நிலவளவங்கி தலைவர் குணசேகரன் மற்றும் முஸ்லிம்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்