ராமநாதபுரத்தில், கலெக்டரை முற்றுகையிட்ட விவசாயிகள் - குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு

ராமநாதபுரத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் பயிர் இழப்பீட்டு தொகை கேட்டு கலெக்டரை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-28 22:45 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படாததை கண்டித்து விவசாயிகள் மாவட்ட கலெக்டர் வீரராகவராவை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இழப்பீட்டு தொகை வழங்காவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர். ஒரே நேரத்தில் அனைத்து விவசாயிகளும் கோரிக்கைகள் குறித்து பேசியதால் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை கலெக்டர் அமைதிப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் 2016-17-ம் ஆண்டில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 1,20,846 விவசாயிகளுக்கு 1,01,288 எக்டேர் பரப்பில் நெல் மற்றும் இதர வேளாண் பயிர்களுக்கு பயிர்காப்பீடு செய்யப்பட்டு காப்பீடு இழப்பீட்டு தொகையாக இதுவரை ரூ.528 கோடியே 90 லட்சம் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், 2017-18-ம் ஆண்டில் 1,53,779 விவசாயிகள் மூலம் 1,23,493 எக்டேர் பரப்பில் நெல் மற்றும் இதர வேளாண் பயிர்களுக்கு பயிர்காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இழப்பீட்டு தொகையினை பெறுவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டமானது விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சம்பந்தப்பட்ட வேளாண் பயிர்காப்பீட்டு நிறுவனத்திற்கு அரசு கடிதங்களின் மூலம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் 2018-19-ம் ஆண்டில் 2,37,522 விவசாயிகள் மூலமாக 1,18,019 எக்டேர் பரப்பில் நெற்பயிருக்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர கடந்த 2016-17-ம் ஆண்டில் விடுபட்ட கிராமங்களில் உள்ள 886 விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க ஏதுவாக சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதன் மூலம் 480 விவசாயிகளின் சரியான விவரங்கள் பெறப்பட்டு பயிர்காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுஉள்ளது. அந்த வகையில் மாவட்ட நிர்வாகமானது எப்போதும் விவசாயிகளின் பக்கம் நின்று அவர்களது நலனுக்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும். இவ்வாறு அவர் பேசினார். அதனைத்தொடர்ந்து பட்டு வளர்ச்சி துறையின் சார்பில் 2017-18-ம் ஆண்டில் பட்டு வளர்ப்பில் சிறப்பாக செயல்பட்ட விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பரிசு தொகையாக தங்கவேலு என்பவருக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரம், பாண்டி என்பவருக்கு 2-ம் பரிசு ரூ.20 ஆயிரம், முனியசாமி என்பவருக்கு 3 பரிசு ரூ.15 ஆயிரத்திற்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் வழங்கினார். கூட்டத்தில் வேளாண்மை துறை இணை இயக்குனர் (பொறுப்பு) சொர்ணமாணிக்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சேக் அப்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்