வேப்பனப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு ½ மணி நேரம் தாமதமாக தொடங்கியது மாணவ, மாணவிகள் அதிர்ச்சி

வேப்பனப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு ½ மணி நேரம் தாமதமாக தொடங்கியதால் மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2019-03-01 22:45 GMT
வேப்பனப்பள்ளி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பிளஸ்-2 தமிழ் முதல் தாள் தேர்வு தொடங்கியது. இந்த பள்ளியில் சுமார் 426 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். காலை 10 மணிக்கு தேர்வு நடைபெற இருந்தது. இதையொட்டி தேர்வர்கள் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் தேர்வு எழுதும் அறையின் அட்டவணையை ஒட்டியிருந்தனர். இதை பார்த்து விட்டு மாணவ, மாணவிகள் அதில் குறிப்பிடப்பட்டிருந்த தேர்வு அறைக்கு சென்று அமர்ந்து இருந்தனர். ஆனால் அந்த அட்டவணை அடுத்த தேர்வுக்குரிய அட்டவணை என தெரியவந்தது. இதையடுத்து மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் வெளியே நிற்குமாறு கூறியுள்ளனர்.

இதனால் மாணவ, மாணவிகள் என்ன நடக்கிறது என குழம்பினர். இதற்கிடையே தேர்வர்கள் மீண்டும் மாணவர்கள் தேர்வு எழுதும் அட்டவணையை மாற்றி ஒட்டினர். இதன் காரணமாக காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய இந்த தேர்வு ½ மணி நேரம் தாமதமாகி 10.30 மணிக்கு தான் தொடங்கியது. இதனால் மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் தேர்வை எழுதினர். ½ மணி நேரம் தாமதமாக தேர்வு தொடங்கியதால் தேர்வினை எழுத கூடுதலாக நேரம் ஒதுக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்