பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தாதது ஏன்? அன்பழகன் எம்.எல்.ஏ. கேள்வி

பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தாது ஏன்? என்று அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

Update: 2019-03-01 22:45 GMT

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுவை சட்டமன்றத்தை கூட்டி முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யாமல் கடந்த 8 வருடமாக மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். கவர்னர், முதல்–அமைச்சர் மோதலால் சட்டமன்ற மாண்புகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாவிட்டால் என்ன நடக்குமோ அதுதான் இந்த சட்டமன்ற கூட்டத்தில் நடைபெற உள்ளது. கண்துடைப்பு நாடகத்துக்காக கூட்டத்தை நடத்துகிறார்கள்.

முதல்–அமைச்சர் நாராயணசாமி எப்போதும் தவறு என்று எதை செல்வாரோ அதை செய்கிறார். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு புதுவைக்கான நிதி இறுதிசெய்யப்பட்ட நிலையில் மாநில திட்டக்குழுவை கூட்டி புதுவை பட்ஜெட்டையும் இறுதி செய்திருக்கவேண்டும். ஆனால் அதை செய்ய தவறிவிட்டனர். புதுவை அரசு தனது கடமையை செய்ய தவறியதால்தான் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று நாங்கள் கூறினோம்.

புதுவையில் 83 பேர் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க உரிமம் பெற்றுள்ளனர். ஆனால் 200–க்கும் மேற்பட்டவர்கள் அனுமதியின்றி பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர். தமிழகத்தில் ஏற்கனவே 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்துவிட்டனர். ஆனால் புதுவையிலிருந்து ஆட்சியாளர்கள் துணையோடு பிளாஸ்டிக் பொருட்கள் கடத்தி செல்லப்படுகின்றன.

புதுவையில் பிளாஸ்டிக் தடை செய்யப்படுமா? என்று முதல்–அமைச்சரிடம் கேட்டால் துறை அமைச்சரிடம் கேளுங்கள் என்கிறார். இது என்ன நியாயம்? அமைச்சர்கள் அதிகாரிகளை கேட்டு அறிவித்திருந்தால் அதற்கான நடவடிக்கை எடுத்திருப்பார்கள். தற்போது தேர்தல் அறிவிப்பு வெளிவரும் முன்பு பிளாஸ்டிக்கை தடை செய்வதற்கான அறிவிப்பினை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் அரசு மீதான குற்றச்சாட்டிற்கு அது வழிவகுக்கும். தற்போது அறிவித்தபடி பிளாஸ்டிக்கை தடை செய்யாதது ஏன்?

புதுவையில் அ.தி.மு.க.–என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பாரதீய ஜனதா மட்டுமல்லாது தற்போது காங்கிரஸ் கூட்டணியில் உள்ளவர்கள் கூட ஆதரவு அளிக்கலாம். புதுவை தலைமை தேர்தல் அதிகாரியை மாற்ற அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளன. ஆனால் இந்த வி‌ஷயத்தில் ஆணையம் கடமை தவறுவதாக தெரிகிறது.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

மேலும் செய்திகள்