குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் திடீர் மழை உபரிநீர் வெளியேற்றம்

குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் திடீரென மழை பெய்ததால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

Update: 2019-03-02 22:45 GMT

டி.என்.பாளையம்,

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த டி.என்.பாளையம் வனப்பகுதியில் குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 42 அடி ஆகும். அணையின் நீர்பிடிப்பு பகுதிகளாக குன்றி, விளாங்கோம்பை, கம்பனூர், மல்லியம்மன் துர்க்கம் ஆகிய மலைப்பகுதிகள் உள்ளன.

இந்த அணையின் மூலம் 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த செப்டம்பர் மாதம் பெய்த மழை காரணமாக அணை நிரம்பி, வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வெளியேறியது. பின்னர் மழை பெய்வது குறைந்ததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்தது. நேற்று முன்தினம் காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 41.50 அடியாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் திடீரென மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 8 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 42 அடியாக இருந்தது. அணை நிரம்பியதை தொடர்ந்து அணைக்கு வந்த மழைநீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டது. குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்