பொன்னேரி அருகே மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

பொன்னேரி அருகே ஆமூர் ஏரியில் தனியார் மூலம் அரசு குவாரி அமைத்து மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-02 22:30 GMT
பொன்னேரி,

பொன்னேரி அருகே ஆமூர் கிராமம் உள்ளது. இங்கு 400 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மணல் குவாரி அமைக்க தனிநபர் ஒருவர் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றார். இந்தநிலையில் நேற்று காலை பொக்லைன் எந்திரங்கள் மற்றும் மணல் எடுத்துச் செல்ல லாரிகள் வந்தன.

பின்னர் ஏரியில் பூஜையுடன் மண் குவாரி தொடங்கப்பட்டது. இதற்கு ஆமூர் பகுதியை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு அனுமதியுடன் மணல் எடுக்கப்படுவதாக கூறி குவாரி நடத்துபவர்கள் ஏரியில் இருந்து லாரிகளில் மணல் நிரப்பினர்.

இதனையடுத்து பொதுமக்களும், விவசாயிகளும் மாதவரம் கிராமத்தின் வழியாக செல்லும் பொன்னேரி பஞ்செட்டி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பொன்னேரி ஆர்.டி.ஓ. நந்தகுமார், தாசில்தார் முருகேசன், துணை தாசில்தார் செல்வகுமார், பொன்னேரி போலீஸ் டி.எஸ்.பி. பவன்குமார்ரெட்டி, இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே விவசாயிகளின் ஒரு பிரிவினர் ஆமூர் ஏரியை ஆழப்படுத்தினால் மழைநீர் தேக்கி வைக்க முடியும். இதன்மூலம் பயிர் தொழில் சிறப்பாக அமையும் என தெரிவித்தனர். இதனால் விவசாயிகளுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனையடுத்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் மாற்றுப்பாதையில் மணல் ஏற்றி வந்த லாரியை தடுத்து நிறுத்தினர். மறியல் காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள், போலீசாரின் ஆலோசனைக்கு பின் லாரிகளில் கொண்டுவரப்பட்ட மணல் ஏரிக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

இந்தநிலையில் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்