கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2019-03-02 22:45 GMT
திருவாரூர்,

திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளரும், திருவாரூர் மாவட்ட செயலாளருமான பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார்.

இதில் மாவட்ட பொருளாளர் நல்லசுகம், மாவட்ட துணைத்தலைவர் சிவனேசன், மாவட்ட குழு உறுப்பினர் அஜய்குமார், ஹரிகரன் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட குழு உறுப்பினர்கள் அறிவழகன், சாந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய பொதுத்தேர்வு கிடையாது என்பதை தமிழக அரசு கொள்கை முடிவாக எடுக்க வேண்டும். தமிழகத்தில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக்கட்டணம், தேர்வு கட்டணம் உயர்த்தப்படுவதை கைவிட வேண்டும். கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

அரசு பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் கழகம் சார்பில் கட்டாய நன்கொடை வசூலிப்பதை தடுக்க வேண்டும். கேரளாவை போல் தமிழகத்தில் கல்விக்கடன் திட்டத்தை கொண்டு வர வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிளில் மடிக்கணினி, கல்வி உதவித்தொகையினை உடனே வழங்கிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்