சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கு: இரும்பு பட்டறை தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் இரும்பு பட்டறை தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2019-03-02 22:15 GMT
திருச்சி,

திருச்சியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமிக்கு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந் தேதி அவருடைய பெற்றோர் ஒரு வாலிபருடன் திருமண ஏற்பாடு செய்து இருந்தனர். இது குறித்து திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சபெருமாள்பட்டியை சேர்ந்த இரும்பு பட்டறை தொழிலாளி ராஜகோபால்(வயது 50) திருச்சி சைல்டுலைனுக்கு போன் மூலம் புகார் தெரிவித்தார். சைல்டுலைன் அமைப்பினர் அங்கு சென்று திருமணத்தை நிறுத்தி சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து ஓரிருநாளில் சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து சிறுமியிடம் விசாரித்தபோது, கர்ப்பத்துக்கு ராஜகோபால் தான் காரணம் என்றும், தினமும் தின்பண்டம் வாங்கி தருவதாக அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாகவும் போலீசாரிடம் கூறினார். அதன் அடிப்படையில் முசிறி அனைத்து மகளிர் போலீசார் ராஜகோபால் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் வெங்கடேசன் ஆஜரானார். வழக்கின் தீர்ப்பை நீதிபதி மகிழேந்தி நேற்று கூறினார். அதில், “குற்றம் சாட்டப்பட்ட ராஜகோபாலுக்கு 2 பிரிவுகளில் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தும், சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும்“ என்றும் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்