புதுச்சேரி சட்டசபையில் ரூ.2,703 கோடியில் இடைக்கால பட்ஜெட் நாராயணசாமி தாக்கல் செய்தார்

புதுவை சட்டசபையில் ரூ.2 ஆயிரத்து 703 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்-அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.

Update: 2019-03-03 00:00 GMT
புதுச்சேரி,

புதுவை சட்டசபை கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. முதலில் திருக்குறளை வாசித்து சபை நடவடிக்கைகளை சபாநாயகர் வைத்திலிங்கம் தொடங்கிவைத்தார்.

இதன்பின் இரங்கல் குறிப்புகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. தொடர்ந்து நிதி ஒதுக்க சட்டமுன்வரைவுகள், வாகன வரி சட்ட திருத்தம் ஆகியவை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையிலான அரசின் செலவினங்களுக்கு தேவையான ரூ.2 ஆயிரத்து 703 கோடியே 63 லட்சத்து 48 ஆயிரத்துக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பெரும்பான்மை ஆதரவுடன் இந்த பட்ஜெட் நிறைவேறியது.

முதல்-அமைச்சர் நாராயணசாமி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் திடீரென சபாநாயகரின் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிதுநேரத்துக்குப் பின் அரசை குற்றஞ்சாட்டி சபையில் இருந்து அவர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

நேற்றைய கூட்டத்தில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., பாரதீய ஜனதா, சுயேச்சை என அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொண்டனர். காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் பகல் 12.05 மணிக்கு நிறைவடைந்தது. அதாவது ஒரு மணி நேரம் மட்டுமே சட்டசபை கூட்டம் நடந்தது.

அதைத்தொடர்ந்து சட்டசபையை காலவரையின்றி சபாநாயகர் வைத்திலிங்கம் ஒத்திவைத்தார். நாடாளுமன்ற தேர்தல் முடிந்தபின்பு 2019-20ம் நிதியாண்டிற்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

மேலும் செய்திகள்