பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி: வைகோ உள்பட 404 பேர் மீது வழக்கு

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்திய வைகோ உள்பட 404 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2019-03-02 23:30 GMT
பணகுடி,

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் கன்னியாகுமரிக்கு வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நெல்லை மாவட்ட எல்லையான காவல்கிணறு சந்திப்பு பகுதியில் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டார். ம.தி.மு.க.வினர் ஏராளமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தின்போது வைகோ வேன் மீது கல்வீச்சு நடந்தது. மேலும் ம.தி.மு.க.வினருக்கும், பா.ஜனதாவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதையடுத்து இருதரப்பினரையும் போலீசார் விரட்டி அடித்தனர். பின்னர், பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டதாக வைகோ உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்து மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்பட 404 பேர் மீது பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டியது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது, அரசு அதிகாரிகள் கலைந்து போகும்படி கூறியும் கலைந்து செல்லாதது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்