வேதாரண்யம் அருகே பரபரப்பு: விவசாயி கார் கண்ணாடி உடைப்பு போலீஸ் குவிப்பு; 14 பேர் மீது வழக்கு

வேதாரண்யம் அருகே விவசாயியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-03-03 22:15 GMT
வாய்மேடு,

தேவேந்திர குல மக்கள் இயக்க நிறுவனர் குமுளி ராஜ்குமார் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வாய்மேடு வழியாக காரில் சென்று கொண்டிருந்தார்.

அந்த காருடன், அவருடைய ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்ட மோட்டார்சைக்கிள்களில் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். வாய்மேடு அருகே ஆயக்காரன்புலம் கடைத்தெருவில் ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக கருப்பம்புலத்தை சேர்ந்த விவசாயி சதீஷ்குமார் என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் ஊர்வலத்தில் சென்றவர்கள் திடீரென கார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் கார் கண்ணாடி உருட்டுக் கட்டைகளால் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அங்கு நேற்று இரவு வரை பரபரப்பு நீடித்தது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதன், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த், வாய்மேடு இன்ஸ்பெக்டர் சுகுணா ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே வாய்மேடு போலீசில் சதீஷ்குமார் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்