மானாமதுரை பகுதியில் தொடர் மணல் திருட்டு: வருவாய்துறையினரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

மானாமதுரை பகுதி வைகை ஆற்றில் தொடர் மணல் திருட்டு சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வருவாய்துறையினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

Update: 2019-03-03 22:45 GMT

மானாமதுரை,

மானாமதுரை பகுதியான வைகை ஆற்றில் கால்பிரவு, கரிசல்குளம், கல்குறிச்சி, வேதியரேந்தல், கீழப்பசலை உள்ளிட்ட கிராமங்களையொட்டி மணல் திருட்டு அதிக அளவில் நடைபெறுகிறது. வைகை ஆற்றை ஒட்டி உள்ள பட்டா இடங்களில் சவடு மணல் அள்ள அனுமதி பெற்று, பின்பு சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளி விற்பனை செய்து வருகின்றனர். இரவு முழுவதும் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருகிறது. இதற்கு ஆதரவாக உள்ள அதிகாரிகளுக்கு, மணல் திருட்டு கும்பல் மாதந்தோறும் பெரும் தொகை வழங்கப்பட்டு வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் மணல் திருட்டை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. மானாமதுரை பகுதியில் அள்ளப்படும் மணல் சிவகங்கை, காரைக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்படுகிறது. மணல்திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாக போலீசாரிடம் மதுரை சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு கருப்பையா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மணல் திருட்டிற்கு உடந்தையாக உள்ள வருவாய்துறையினரிடம் விசாரணை நடந்தது.

அதில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் வைத்து வருவாய்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். வைகை ஆற்றுப்படுகையை ஒட்டி உள்ள கிராமங்களான கல்குறிச்சி, கால்பிரவு, வேதியரேந்தல், கீழப்பசலையை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்களிடமும் மணல் திருட்டு சம்பந்தமாக தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு, அதை வீடியோவில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் எழுத்து பூர்வ வாக்குமூலமும், சி.பி.சி.ஐ.டி. போலீசார் வாங்கியுள்ளனர். இந்த திடீர் விசாரணை வருவாய்துறை அதிகாரிகளிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் மணல் திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாக காவல்துறை மற்றும் வருவாய்துறையினரிடம் விசாரணையை முடித்துள்ள நிலையில், அடுத்ததாக கனிமவளத்துறை அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்களிடமும் மணல் திருட்டு குறித்து தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக வருவாய்த்துறையை சேர்ந்தவர்கள் மற்றும் போலீசார் கூறும் போது, தவறு செய்வதர்கள் மீது விசாரணை செய்வதில் எந்த தவறும் இல்லை, நடவடிக்கைகள் எடுப்பதிலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் சம்பந்தம் இல்லாத புகாரின் அடிப்படையில் அனைவரின் மீதும் விசாரணை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்