சேலம் பெருமாள் கோவில் மலையில் காட்டுத்தீ

சேலம் பெருமாள் கோவில் மலையில் காட்டுத்தீ பற்றி எரிவதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-03-03 22:30 GMT
சேலம், 

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் பெருமாள் கோவில் மலை உள்ளது. இந்த மலைப்பகுதி முழுவதும் ஏராளமான மரங்கள் உள்ளன. மேலும் பல்வேறு செடிகளும் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சேலத்தில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. மேலும் வறட்சியின் காரணமாக மலைப்பகுதியில் உள்ள செடிகள், மரங்கள் காய்ந்து உள்ளன.

நேற்று மாலை 5.30 மணி அளவில் மலையின் வடக்குப்பகுதியின் கீழ்ப்பகுதியில் உள்ள மரம், செடிகள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று பலமாக அடித்ததால் அந்த பகுதி முழுவதும் இருந்த மரங்கள், செடிகளில் தீ மள, மளவென பரவி எரிந்தது. மேலும் மலையின் மேல்பகுதி வரை தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டம் காணப்பட்டது.

இது குறித்து அங்கிருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையொட்டி சேலம் வனச்சரகர் சுப்பிரமணியன் தலைமையில் வனவர்கள் மோகன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் வனக்காப்பாளர்கள் மற்றும் அசோகர் பசுமை இல்ல தொண்டு நிறுவன இயக்குனர் கணபதி தலைமையில் பலர் என மொத்தம் 25-க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். தீ கொழுந்து விட்டு எரிவதால் அவர்களால் பக்கத்தில் நெருங்க முடியவில்லை.

எனவே தீயை கட்டுப்படுத்த வனத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். மலையின் மேற்கு பகுதியின் அடிவாரத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும் குடியிருப்பு பகுதியில் தீ பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாலையில் பிடித்த காட்டுத்தீ நள்ளிரவு வரை தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது.

இது குறித்து வனச்சரகர் சுப்பிரமணியிடம் கேட்ட போது நேற்று மலைக்கு சென்றவர்களில் யாராவது புகை பிடித்துவிட்டு நெருப்பை அணைக்காமல் அப்படியே போட்டு விட்டு சென்று இருப்பார்கள். இதனால் காய்ந்து போன செடியில் தீப்பிடித்து இருக்கலாம். எனவே இந்த தீயை அணைக்க போராடி வருகிறோம் என்று கூறினார்.

மேலும் செய்திகள்