வெளிநாட்டு பணத்தை மாற்றி கொடுக்கும் அலுவலக ஊழியரிடம் ரூ.4 லட்சம் பறிப்பு 2 பேர் கைது

வெளிநாட்டு பணத்தை மாற்றி கொடுக்கும் அலுவலக ஊழியரிடம் ரூ.4 லட்சம் மற்றும் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-03 22:45 GMT
மும்பை,

மும்பை மலாடு பகுதியில் பிரதிப் மெண்டுரே என்பவர் வெளிநாட்டு பணத்தை இந்திய ரூபாயாக மாற்றி கொடுக்கும் அலுவலகம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவரது அலுவலகத்துக்கு போன் செய்து ஹர்திக் என்ற பெயரில் ஒருவர் பேசினார்.

அப்போது, அவசரமாக வெளிநாடு செல்ல விமான டிக்கெட் எடுப்பதற்கு பணம் தேவைப்படுவதாகவும், இதற்காக தன்னிடம் இருக்கும் 4 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் 2 ஆயிரம் சிங்கப்பூர் டாலருக்கு இந்திய பணம் தரும்படி கேட்டார்.

மேலும் அந்த பணத்தை கோரேகாவில் உள்ள ஒரு முகவரியை தெரிவித்து அங்கு வந்து தந்து விட்டு தன்னிடம் உள்ள வெளிநாட்டு பணத்தை வாங்கி கொள்ளும்படி கூறினார்.


அதன்படி பிரதிப் மெண்டுரே தனது அலுவலக ஊழியர் ஒருவரை அந்த நபர் கூறிய முகவரியில் கொண்டு கொடுக்கும்படி ரூ.4 லட்சத்தை கொடுத்து அனுப்பி வைத்தார். அதன்பேரில் ஊழியர் அங்கு வந்தார். அப்போது, அங்கு காரில் வந்த 4 பேர் தங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் என கூறி கொண்டு அவரை வழிமறித்தனர். மேலும் அந்த ஊழியரிடம் இருந்த ரூ.4 லட்சம், செல்போனை பறித்து கொண்டு காரில் தப்பி சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர் இதுபற்றி பிரதிப் மெண்டுரேவிடம் கூறினார். அவர் தின்தோஷி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பணத்தை பறித்து சென்ற ஆசாமிகளின் கார் பதிவெண்ணை கொண்டு விசாரணை நடத்தினார்கள்.

இதில், ஹர்திக் என்ற பெயரில் போன் செய்து ஊழியரை அங்கு வரவழைத்து பணம், செல்போனை பறித்து சென்றது தனியார் நிறுவன ஊழியர்களான ஜெத்ராம் மாலி, ராஜ்குமார் துபே ஆகிய 2 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்