கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-04 22:15 GMT
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட மையம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பிரதாப் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் சின்னசாமி, மாது, மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் பண்டரிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் குருநாதன், சலீம்பாஷா, துரைமுருகன், சித்ரா, நிர்மலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது குறித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிர்வாகிகள் கூறும்போது, மக்களவை தேர்தலுக்காக தாசில்தார் நிலையில் உள்ள அலுவலர்கள் தமிழகம் முழுவதும் மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் மாற்ற செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 38 அலுவலர்கள் இடம் மாற்றம் செய்யப்பட உள்ளனர். இதுவரை நடந்த எந்த ஒரு மக்களவை, சட்டபேரவை தேர்தலிலும் தாசில்தார்கள் நிலையில் உள்ள அலுவலர்கள், மாவட்டத்திற்குள் மட்டுமே இடமாற்றம் செய்து வந்த நிலையில், தற்போது மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் செய்வது கண்டிக்கத்தக்கது. அவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டால், தேர்தலின் போது பதற்றமான இடங்களை, மாறுதலாகி வரும் அலுவலர்கள் கண்காணிப்பது மிகவும் கடினம்.

தேர்தலில் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படும். எனவே, இந்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையம், தாசில்தார்களை மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும். தொடர் போராட்டம் குறித்து சங்கத்தின் தலைமையின் முடிவு படி தொடரும் என்றனர்.

மேலும் செய்திகள்