காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 120 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் பா.பொன்னையா வழங்கினார்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 120 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பா.பொன்னையா வழங்கினார்.

Update: 2019-03-04 23:15 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமை தாங்கினார்.

இதில், முதல்-அமைச்சர் சாலை விபத்து நிவாரண நிதியாக 115 பேருக்கு ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்பிலான காசோலைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பில் 2 நபர்களுக்கு பேட்டரியால் இயங்க கூடிய சக்கர நாற்காலிகள், ரூ.6 ஆயிரத்து 500 மதிப்பில் சக்கர நாற்காலி ஒரு நபருக்கும், ரூ.11 ஆயிரத்தில் 2 நபர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடந்த மாதம் 26-ந் தேதி நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாளில், புன்செய் அரசன்தாங்கல் கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவரிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுவின் அடிப்படையில் தோட்டக்கலை மின் இணைப்பு வழங்கப்பட்டு, அதற்கான மின் கட்டண அட்டையை மனுதாரருக்கு கலெக்டர் வழங்கினார்.

மேலும், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் சார்பில், எய்ட்ஸ் விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் துறை அதிகாரி சுந்தரமூர்த்தி, சார் ஆட்சியர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்