திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், இலவச வீடு கேட்டு மனு கொடுத்த கட்டிட தொழிலாளர்கள்

இலவச வீடு கேட்டு கட்டிட தொழிலாளர்கள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். மேலும் பிணம் போல் 2 பேரை இந்து மக்கள் கட்சியினர் தூக்கி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-03-04 23:00 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க் கும் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பொதுமக்கள், தங்களுடைய குறைகள் குறித்து மனு கொடுத்தனர். அப்போது தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாலன் தலைமையில் ஏராளமான கட்டிட தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கட்டிட தொழிலாளர் களுக்கு இலவச வீடு, மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம், விபத்து மரணத்துக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம், இயற்கை மரணத்துக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் கோரிக்கைகள் தொடர் பாக மனு கொடுத்தனர்.

இதற்கிடையே 2 பேரை பிணம் போன்று நாற்காலியில் வைத்து, இந்து மக்கள் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக தூக்கி வந்தனர். அப்போது ஒருவர் வாழைப்பழத்தில் ஊதுபத்தியை ஏற்றி கையில் ஏந்தியபடி வந்தார். இதையடுத்து மாநில நிர்வாகிகள் ரவிபாலன், ரவிக் குமார், மாவட்ட செயலாளர் ஜெகதீசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.

அதில், ரெட்டியார்சத்திரம் தாதன்கோட்டையில் உள்ள கல்குவாரியில் அடிக்கடி வெடிகள் வைக்கப்படுவதால் வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. பாறைகளை உடைப்பதால் ஏற்படும் தூசியால் விவசாய நிலங்கள் பாழாகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வேடசந்தூரை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி கிருஷ்ணசாமி கொடுத்த மனுவில், நான் 65 ஆண்டுகளாக வசித்து வரும் வீட்டுக்கு பட்டா கேட்டு பலமுறை விண்ணப்பித்து விட்டேன். இதுவரை பட்டா வழங்கவில்லை. இதனால் நான் மிகுந்த மனஉளைச்சலில் உள்ளேன். எனவே, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

திண்டுக்கல்-கரூர் சாலையில் உள்ள பாறைபட்டியை சேர்ந்த ராஜூ கொடுத்த மனுவில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊராட்சித்துறை அதிகாரி எனக்கூறி எனது வீட்டுக்கு ஒருவர் வந்தார். மின்விளக்கை சரிசெய்வதாக கூறி என்னை வெளியே அனுப்பி விட்டார். பின்னர் வீட்டில் இருந்த 26½ பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்று விட்டார். இதுகுறித்து புகார் அளித்தும் போலீசார் இதுவரை நகை மற்றும் பணத்தை மீட்டு தரவில்லை என்று கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்