தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் வீடு கட்டித்தர கோரிக்கை

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வீடு கட்டித்தர கோரி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2019-03-04 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மாவட்ட செயலாளர் தில்லைவனம் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட நிர்வாகிகள் சேவையா, அன்பழகன், துரை.மதிவாணன், பரிமளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு கட்டி கொடுக்க வேண்டும். விபத்தில் சிக்கி சிகிச்சை பெறுவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு பேறுகால பயனாக 6 மாத குறைந்தபட்ச சம்பளத்துக்கு ஈடாக ரூ.90 ஆயிரம் வழங்க வேண்டும்.

இயற்கை மரணத்துக்கு ரூ.5 லட்சமும், விபத்து மரணத்துக்கு ரூ.10 லட்சமும் வழங்க வேண்டும். குழந்தைகளின் கல்வி செலவை அரசு முழுமையாக ஏற்க வேண்டும். வேலையில்லா காலத்தில் நிவாரணம் வழங்க வேண்டும். திருமண உதவித்தொகை ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்பதை மாற்றி, நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் சுகுமாறன், சிகப்பி, ராமையன், திருநாவுக்கரசு, செல்வராஜ், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் தொழிலாளர்கள் அனைவரும் கலெக்டர் அண்ணாதுரையை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், நலவாரியத்தில் ரூ.2,800 கோடிக்கு மேல் நிதி இருந்தும் உதவித்தொகை போதுமானதாக இல்லை. நலவாரியம் தொடங்கப்பட்டு 26 ஆண்டுகள் கழிந்துவிட்டன. நலவாரியத்தின் நோக்கங்களை நிறைவேற்றி கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வுரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்