இலவச பஸ் பாஸ் வழங்கக்கோரி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் மனு

இலவச பஸ் பாஸ் வழங்கக்கோரி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2019-03-04 22:00 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மற்றும் குறைகளை மனுவாக அளித்தனர். அதன்படி, ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் இலவச பஸ் பாஸ் (பயண அட்டை) வழங்கக்கோரி மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளான நாங்கள் கூடலூர் தாலுகா சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தினமும் பஸ்சில் கல்வி பயில ஊட்டி அரசு கலைக்கல்லூரிக்கு வந்து செல்கிறோம். 2018-2019-ம் கல்வியாண்டிற்கான இலவச பஸ் பாஸ் கூடலூர் மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட வில்லை. இதனால் தினமும் கல்லூரி சென்று வர ரூ.120 செலவாகிறது. பஸ் பாஸ் இல்லாததால் கல்லூரி செல்வதற்கு அவதி அடைந்து வருகின்றோம். மேலும் பஸ் பாஸ்-க்காக அனைத்து உறுதி சான்றுகள், படிவம் ஏற்கனவே கொடுக்கப்பட்டு உள்ளது. எனவே, மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு இலவச பஸ் பாஸ் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஊட்டி அருகே நரிகுழி ஆடா கிராம மக்கள் குடிநீர் வசதி செய்து தரக்கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நஞ்சநாடு ஊராட்சிக்கு உட்பட்ட நரிகுழி ஆடா கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட வில்லை. இதனால் நாங்கள் கடுமையாக அவதி அடைந்து வருகிறோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. அதன் காரணமாக கிராமத்தையொட்டி உள்ள வனப்பகுதியில் இருந்து ஊற்று தண்ணீரை எடுத்து வந்து பயன்படுத்துகிறோம். தற்போது மழை இல்லாததால் ஊற்று தண்ணீர் நின்று விட்டது. இதனால் குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். ஆகவே, கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிடத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆரி மற்றும் கட்டிடத் தொழிலாளர்கள் கொடுத்த மனுவில், நீலகிரி மாவட்டத்தில் கட்டிடத் தொழிலாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு வீட்டுமனை வழங்கி வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்ட பா.ஜனதா விவசாய அணி துணை தலைவர் பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், ஊட்டி நகரில் உள்ள அனைத்து பொது கழிப்பிடங்களும் சுகாதாரம் இன்றி மோசமான நிலையில் உள்ளது. இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் மனுகொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கழிப்பிடங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, பொதுக்கழிப்பிடங்களை பராமரிக்க நடவடிக்கை எடுப்பதோடு, புதிய கழிப்பிடங்கள் கட்ட வேண்டும். இல்லையென்றால் நகராட்சியை கண்டித்து மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்